Total Pageviews

Wednesday, October 14, 2015

இரயில் பயணங்களில்….(கோழிக்கோடு பயணம் தொடர்ச்சி)


கோழிக்கோட்டிற்குச் செல்வதற்கு பகல்நேர ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுத்திருந்தோம். பெரும்பாலும் இரவு நேர ரயில் பயணங்களையே அனுபவித்திருந்த ஹேமாவுக்கு பகல்நேரப் பயண ஏற்பாடு குதூகலத்தைக் கூட்டியிருந்தது.

கேரளாவின் ஒரு திசை முழுதும் கடற்கரைகள்தான் என்றும் அரேபியப் பெருங்கடல் அந்தக் கடற்கரைகளில் இருப்பதாகவும், அங்கே யாரும் தமிழ் பேசுவதில்லையென்றும் தகவல்களை அடுக்கியபடியே வந்தாள். வழியெங்கும் மீன், தேங்காய், நேந்திரம் பழம், புட்டு, கடலைக் கறி, ஓணம், மலையாளம், படகுப்போட்டி என கேரளாவைப் பற்றி GK புத்தகத்தில் படித்திருந்தவையெல்லாம் வரிசையாக வந்து கொண்டேயிருந்தன. இடையிடையே உனக்குத் தெரியுமா என்கிற கேள்வி வேறு.

பாலக்காடு தாண்டி மன்னனூர் வந்ததும் “அய்ய்ய் அம்மா கடல் கடல்!” என்று குதிக்கத் துவங்கினாள். அதற்குள் எப்படி கடல் வரும் என்று ஆச்சர்யத்துடன் எட்டிப்பார்த்தால் அங்கே ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ”அது கடல் இல்லடா” பாப்பா, ஆறு!” என்று சொன்னபோது அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவளது குதூகல மனம் இல்லை. மயிலாடுதுறையில் பணி செய்தபோது அங்கிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் வழியில் நிறைய குளங்களைப் பார்த்திருக்கிறாள். சென்னையிலும் நாகப்பட்டினத்திலும் வேளாங்கண்ணியிலும் கடல் பார்த்திருக்கிறாள். சிறிய நீர்ப்பரப்பைக் குளமென்றும், பரந்து விரிந்த நீர்ப்பரப்பைக் கடலென்றும் அறிந்து வைத்திருந்த அவளுக்கு இரண்டுக்கும் இடைப்பட்ட ஓடும் நீர்நிலையை ஆறு என ஏற்றுக் கொள்வதில் அநேக சிரமங்கள் இருந்தன. ஆறு என்பதை பாடப்புத்தகத்தில் தூரத்து லேண்ட் ஸ்கேப் ஓவியத்தில் ஒரு வளைகோட்டைப்போல பார்த்ததும், நான் அவளை இது வரை ஆறு பார்க்கக் கூட்டிச் சென்றதில்லை என்பதும், ஆறெனப்பட்ட அனைத்தும் தற்போது வறண்டு கிடப்பதும்  அவற்றுள் சில. வலிந்து விளக்கிச் சொல்ல முற்படுகையில் போம்மா! என்றவாறு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டாள்.

எதிரில் அமர்ந்திருந்த ஒரு கேரளப் பெண் “It’s a river மோளே. Not a sea.   என்றதும் சற்று நம்பிக்கை வந்தவளாய்  என்னைப் பார்க்க “அதைத்தானடி நானும் சொன்னேன்!” என்ற முகபாவனையில் நான் அவளைப் பார்க்க, அய்யோ பாவம் என்று சிரித்துவைத்தாள். ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை இருக்கும். கடலுக்கு ஒரு கரைதான் கண்ணுக்குத் தெரியும். கடல் நீர் உப்புக்கரிக்கும். ஆற்றுநீர் கரிப்பதில்லை என அந்தப் பெண் இவளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லிக் கொண்டே வர அக்கறையாய்க் கேட்டுக் கொண்டாள்.

Bear hunt rhymes ல வருமே அந்த மாதிரி ஆறாம்மா?
Yes, It’s a river!  என்று நான் ஆரம்பிக்கவும் அவளுக்கு பிடித்தமான bear hunt பாடலை Michael Rosen கண்களை உருட்டிக் கொண்டு பாடுவதைப் போலவே அந்த கேரளப்பெண்ணிற்குப் பாடிக்காட்ட ஆரம்பித்தாள்.

We are going on a bearhunt, going to catch a big one
What a beautiful day, we are not scared
Oh o… It’s a river
Deep…. Cold…. river!”
We cant go over it, We cant go under it
Oh no! we gotta go through it
Spilsh! Splosh! Splish! Splosh!

நானும் இதைத்தான் சொன்னேன். பக்கி நம்பவில்லை. எந்தக் குழந்தைதான் அம்மா சொல்வதை நம்புகிறது?  அடுத்த ஸ்டேஷனில் அந்தக் கேரளப்பெண் இறங்கிக் கொள்ள சற்று தூரம் சென்றதும் மீண்டும் ஒரு நதி குறுக்கிட்டது. 
"அம்மா அங்க பாரு ஆறு!" மீண்டும் குதிப்பு. 
திடீரென்று ”அம்மா! ஆத்துக்குள்ள பாலைவனம்”.
இதென்னடா அடுத்த வம்பு என்று எட்டிப்பார்த்தால் அந்த ஆற்றில் தன்னீர் வறண்ட பகுதியில் ஒரு மணற்பரப்பு.
”ஷ்ஷ்ஷப்பா முடியலையே…!” எனது மைண்ட் வாய்ஸ் அவளுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ”பாப்பா இது பாலைவனம் இல்லை. ஆத்துல தண்ணி வத்திப் போகும்போது மணல் தெரியும்! அதுதான் இது”
 அவளுக்கு எரிச்சல் மேலிட்டிருக்கவேண்டும். "லூசு அம்மா!” அவள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டது.
 ”போம்மா மணல் இருந்தா அது டெஸர்ட் தான்”. சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அழைத்துப்பார்த்தும் என் பக்கம் திரும்பவேயில்லை. என்ன சொல்லி புரியவைப்பது? அந்தக் கேரளப் பெண் இருந்திருந்தால் சற்றுத் தேவலை என்று தோன்றியது.

ரயில் பரப்பனங்காடி ஸ்டேஷன் தாண்டி சிறிது நேரம் சென்றதும்
”நம்ம ஊர்ல ஆறே கிடையாதாம்மா? அடுத்த கேள்வி.
இருக்கே! நம்ம ஊர் ஆத்துப் பாலம் இருக்கே அதுக்குக் கீழ இருக்கறது ஆறுதான்.
ஆனா அதுல தண்ணியே இல்ல?.
மழை பேய்ஞ்சா வரும்.
மழையில்லாட்டி?
வராது.
ஏம்மா?

எனக்கு ”If you can't explain it to a six year old, you dont really understand it" என்கிற வாசகம்தான் நினைவுக்கு வந்தது. இவளுக்கு ஏழு வயது. பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லை.

ஏன் வறண்டு போச்சு? ஏன் மழை வரலை? ஏன் மரமெல்லாம் வெட்டணும்? கேள்விகள் வந்து விழுந்துகொண்டே இருக்க எனக்கு கோழிக்கோடு வந்துவட்டால் பரவாயில்லை என்று தோன்றியது.

வீட்டுக்குப் பின்புறம் கண்மாயையும், கோடை விடுமுறைக்குச் செல்லும் அத்தை ஊரில் ஆற்றையும் அனுபவித்தவளின் மகளுக்கு ஒரு நீர்நிலையை நதியா குளமா கடலா என்று அடையாளப்படுத்த இயலவில்லை. குழாயிலும், டேங்கிலும் பாட்டிலிலுமே  தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருக்கிற தலைமுறை.  இன்னதென்று தெரியாமல் மேலிட்ட ஒரு குற்றவுணர்வு குறுகுறுவென்று அரிக்கத் துவங்கியதை மறுப்புக்காட்டாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டேன்.  நதியைக் கடலென்று அடையாளப்படுத்தியதும், நதிக்குள்ளே பாலைவனத்தைக் கண்டடைந்த திணைபேதமும் அவள் குற்றமல்ல.  ”அவள்” என்கிற அவள் தலைமுறையின் குழப்பத்திற்கும் கேள்விக்கும் நீராதாரத்திற்கும் ”நான்” என்கிற என் தலைமுறை  என்ன பதில் வைத்திருக்கிறது?


ஆபிதயும் ஃபாத்திமயும் பின்ன ஞானும் (கோழிக்கோடு பயணம்)


சமீபத்தில் கோழிக்கோட்டில் நடந்த போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்கு  ஹேமா தகுதி பெற்றிருந்தாள். போட்டியில் கலந்துகொள்வதை விட கேரளாவைப் பார்ப்பதில்தான் அவளுக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. பயண அனுபவங்களையும் போட்டி முடிவுகளையும் பற்றி பேசுவதற்கு நிறைய இருந்தாலும் ஆபிதா, ஜைனாபீ மற்றும் ஃபாத்திமாவைப் பற்றி முதலில் பகிர்ந்து கொள்வதே சிறப்பு. கோழிக்கோட்டில் இது வரை அறிமுகமேயில்லாத ஆபிதாவின் வீட்டில் தங்குவதாய் ஏற்பாடு. (நன்றி முத்துக் கிருஷ்ணன்) கூடவே  ஃபாத்திமாவின் குடும்பத்தோடு ஒரு அறிமுகமும் கிடைத்தது. இருவருமே சமூகச் செயற்பாட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  குடும்பத்தில் முக்கால்வாசிப்பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கிறார்கள். 

ஆபிதாவும் ஃபாத்திமாவும் ஃபாத்திமாவின் தாய் ஜைனாபீயும் நிறைய வாசிக்கிறார்க்ள். விவாதிக்கிறார்கள். அங்கிருந்தபோது ஃபாத்திமா Mario Vargas Llosa-வின் The Feast of the Goat-ஐ முடித்துவிட்டு Franz Kafka-வின் The Trials-ஐ வாசிக்கத் துவங்கியிருந்தாள். ஆபிதா சிறந்த மேடைப் பேச்சாளர். ஆபிதாவின் சகோதரர் தன்னை ஒரு சுமை தூக்கும் தொழிலாளி என்று பெருமை பொங்க அறிமுகப் படுத்திக் கொள்கிறார். ஃபாத்திமாவின் தாய் ஜைனாபீ ஆறரை அடி உயர சாந்தசொரூபி. வீட்டுக்குள் இருந்துகொண்டே செய்தித்தாள்களிலும் கணினியிலும் உலக நடப்புகளை அறிந்துகொள்கிறார்.  

அந்த வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் இல்லை. முக்கியமாக குடும்பத்தில் யாரும் ஃபேஸ்புக்கில் இல்லை. தமது மதத்தைப் போலவே பிற மதங்களையும் மதிக்கிறார்கள். ஒரு போதும் பிற மதத்தை குறைத்தோ தாழ்த்தியோ பேசுவதில்லை. தனி மனித உணர்வுகளுக்கும் அவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கும் மிகுந்த மதிப்பும் அக்கறையும் காட்டுகிறார்கள். தம்மை இணைத்துக் கொண்டிருக்கும் நிறுவனத்திற்காக உழைக்கிறார்கள். ஃபாத்திமாவின் தாயைத் தவிர அங்கிருந்த அனைவரும்  மேடைப் பேச்சாளர்கள். 

கோழிக்கோட்டுக்கு பயணம் செய்துவிட்டு மலபார் உணவுவகளைப் பேசாமல் இருந்தால் அது பெருங்குற்றம். இதோ தட்டச்சு செய்யும்போதே விரலினிக்கிறது. நாவினிக்கிறது. நம்மூர் பிரியாணிக்கும் நோன்புக் கஞ்சிக்கும் குதியாட்டம் போடும் நாக்கு அவர்களது மலபார் உணவு வகைகளுக்கு குத்தாட்டம் போட்ட கதையை என்னவென்று சொல்ல? சப்பாத்தி, தேங்காய் சேர்த்து செய்த ’வெள்ளையப்பம்’, அரிசிமாவில் இட்லி சைக்குக்கு தோசை கனத்திற்கு செய்யப்படும் ’பத்திரி’, நெய்யும் லவங்கப்பட்டையும் சேர்த்து சமைத்த சோறு, என அனைத்து உணவுகளையும் பெரிதாக இருந்த ஒரே தட்டில் அடுக்கியும் குவித்தும் பரப்பியும் வைத்திருந்த அழகே apetite-ஐக் கிளப்பியது.  தொட்டுக்கொள்வதற்கு கடுக்கா கறி (கடற்காய்கள் எனப்படுகிற Salt water mussel), மீன் வகைகள், இறால், மாட்டிறைச்சி வரட்டியது,  ஹமுஸ், என வகை வைகையாய்ப் பீங்கான் கிண்ணங்களில் சுற்றிலும் அடுக்கப் பட்டிருந்தன. எல்லோரும் சுற்றியமர்ந்து சாப்பிட்டோம். நான் ஆஸ்ஸம் அட்டகாசமாய் ஒரு பிடி பிடித்தேன். 

ஆபிதாவின் குழந்தைகள் காசியாவும் ஃபுர்கானும் ஹேமாவுக்கு பை நிறைய பரிசளித்தார்கள். கடற்கரைக்கும் கோளரங்கத்திற்கும் அழைத்துப் போனார்கள். பட்டம் விட்டார்கள். காசியா ஹேமாவிற்கு மலையாளம் கற்றுக் கொடுத்தாள். அங்கிருந்த ஒரு செயற்கைக் குளத்திற்கு அழைத்துச் சென்று வழக்கமாக ரசிக்கும் தாமரையையும் தவளையும் அறிமுகப்படுத்தினாள்.  பதிலுக்கு ஹேமா காசியாவிற்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஆங்கிலமும் மலையாளமும் தமிழும் அங்கே கபடி ஆடின. விடுமுறை கிடைக்கும்போது அடிக்கடி வரவேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். தினமும் குறுஞ்செய்தி அனுப்பி நலம் விசாரித்துக்கொள்கிறார்கள். 
இதற்கு முன் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் கோழிக்கோடு வந்திருக்கிறேன். பணிநிமித்தம் வந்து விடுதிகளில் தங்கி உண்டு திரும்பிய நாட்கள் அவை. மரபு வழுவாத ஒரு உள்ளூர்க்காரரின் வீட்டில் அவரது குடும்பத்தாரோடு ஒரு உறவினரைப் போல தங்கி உண்டு களித்துத் திரும்பிய இந்த நாட்கள் முற்றிலும் வேறொரு அனுபவத்தைத் தருபவை. 

மத நம்பிக்கையிலும் மொழியிலும் கலாச்சாரத்திலும் உடையிலும் உணவிலும் இருந்த வேறுபாடுகள் குறித்த எனது  ஆரம்பக்கட்டத் தயக்கங்களை அவர்களது அன்பும்  நட்பும் அக்கறையும் அடித்து நொறுக்கி அங்கிருந்த குப்பைக்கூடையில் போட்டன. கை நிறைய நட்போடும் மனம் நிறைந்த அன்போடும் ஊர்வந்து சேர்ந்தோம்.

ஆபிதயும் ஃபாத்திமயும் பின்ன ஞானும் இப்போள் கூட்டுகாரிகளாணு

நன்றி: Muthu Krishnan​

Friday, December 12, 2014

கெட்ட பய காளி, பத்த வச்ச பரட்டை


அன்புள்ள ரஜினி அங்கிள், 



நான் உங்கள் ரசிகை அல்ல. உங்களுடன் நடித்த நடிகைகளின் கவுன்களுக்கு ரசிகையாய் இருந்தேன். ஆனாலும் தளபதி, அன்புள்ள ரஜினிகாந்த், தம்பிக்கு எந்த ஊரு, நெற்றிக்கண், தில்லுமுல்லு, முள்ளும்மலரும், நினைத்தாலே இனிக்கும், பதினாறு வயதினிலே மூன்று முடிச்சு ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதுவும் அந்த ”கெட்ட பய காளியும், பத்த வச்ச பரட்டையும்”. சான்சே இல்லை அங்கிள். அட அதை விடுங்கள் அங்கிள். நான் சொல்ல வந்தது வேறு.



எனக்கு ஒரு அத்தை மகன் இருக்கிறான். உங்களின் அதி தீவிர ரசிகன். அவன் பெயர் கண்ணன். உங்களுக்காக தன் பெயரையே மாற்றி தன்னைத்தானே  “ரஜினிக்கண்ணன்” அழைத்துக் கொண்டவன். இப்போதும்கூட ஊரே அவனை அப்படித்தான் அழைக்கிறது. உங்கள் மீது கொண்ட வெறித்தனமான பாசத்தாலும், பைத்தியக்காரத்தனமான அன்பினாலும் அடர்த்தியான அவன் முடியை இடது நெற்றியின் மேற்புறம் ஒரு ஓரமாக மழித்துக் கொண்டு அரை வழுக்கையில் (உங்கள் ஸ்டைலில்) அலைவான். உங்களைப் போலவே உடை உடுத்திக்கொண்டு, பேசிக்கொண்டு, ஸ்டைல் எல்லாம் செய்துகொண்டு அப்பப்ப்பப்ப்பா… அவனைப் பார்க்கும்போதெல்லாம் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும். எனக்கும் அவனைக் கொஞ்சோண்டு பிடிக்கும் :-P



எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில் எந்த ஊரில் எந்த திருவிழா நடந்தாலும் அங்கே நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் உங்களைப்போலவே நடனமாடிக்கொண்டிருப்பான். உங்களைப்போலவே  உடை உடுத்திக்கொண்டு, உங்களைப்போலவே மேக்கப் போட்டுக்கொண்டு உங்களைப்போலவே காட்டிக்கொள்ள மிகவும் மெனக்கெட்டு, மேடையில் ஆடி அசத்திவிடுவான்.  



”ஒரு மைனா மைனாக்குருவி மனசோடு பாடுது என்று மூன்று பெண்களுடன் சேர்ந்து அவன் ஆடும்போது சற்று பொறாமையாக இருக்கும். ”அத்த மக ராசி! அத ஊர் முழுக்க பேசி! கொட்டு மேளம் கொட்டி வாசி!” என்ற வரிகளுக்கு இருக்கிற அத்தனை அத்தை மகள்களையும் சுட்டிக்காட்டுவான். நாங்களெல்லாம் விசிலடித்து கைதட்டுவோமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ரஜினிக் கண்ணனுக்கு என்னைப்போல் எக்கச்சக்க ரசிகைகள். இப்போதும் சொல்கிறேன் குறித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ரசிகை அல்ல.  இப்படி நடனமாட போன இடத்தில் ஒரு பெண்ணை டாவடித்து கல்யாணம் செய்துகொண்டு மதுரைக்குப் பக்கத்தில் செட்டில் ஆகிவிட்டான். முதல் மனைவியும் அவன் பிள்ளைகளும் இதோ அடுத்த தெருவில் தான் இருக்கிறார்கள்.  அவனைக் கடைசியாகப் பார்த்து ஒரு இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும்.  



கிடத்தட்ட படையப்பா படத்துக்குப் பிறகு வந்த எல்லாத் திரைப்படங்களிலும்  ரஜினி படத்தில் வருகிற ரஜினி, ரஜினியைப் போலவே இல்லை ரஜினி அங்கிள். ரஜினிக்கண்ணன் போன்ற யாரோ ஒருவர் ரஜினி வேஷம் கட்டி நடிப்பது போலவே தெரிகிறது ரஜினி அங்கிள். என்னத்தைச் சொல்ல. இதோ இந்த லிங்கா படத்து போஸ்டரில்கூட ரஜினிக் கண்ணன் தான் தெரிகிறான் ரஜினி அங்கிள். அந்தப் படத்து விளம்பரத்துல கூட உங்களை மாதிரி யாரோ வேஷம் கட்டி ஆடுகிறார்கள் ரஜினி அங்கிள். ஆனா உங்கள் அசல் ஸ்டைல் அதில் இல்லை அங்கிள். ஆமா அங்கிள். சற்றே தூக்கலான மேக்கப் போட்ட, அடர்த்தியாய் லிப்ஸ்டில் போட்ட , உங்களைப் போலவே விக் வைத்துக்கொண்ட உங்களைப் போலவே ஸ்டைல் காட்டுகிற ”சற்றே வயதான” ரஜினிக் கண்ணன்தான் அங்கிள் அங்கே ஆடுகிறான். அது நீங்கள் இல்லை.



விசாரித்துப் பார்த்தால் அவன் உங்களைப்போல் வேஷம் கட்டி ஆடுவதிலிருந்து ரிட்டையராகி விட்டானாம்.  மதுரைப் பக்கம் பெயிண்ட்டராக இருப்பதாகத் தகவல். எனில் லிங்கா படத்தில் வருவது யார் அங்கிள்? நிச்சயமாக அது நீங்கள் இல்லை. உங்கள் ஸ்டைல் இல்லை. உங்கள் குரல் இல்லை. உங்களைப் போன்ற ஒரு வேஷம். உங்களுடையதைப் போன்ற ஒரு  ஸ்டைல். உங்களுடையதைப் போன்ற ஒரு குரல். உங்களைப் போல் செய்துகொண்ட ஒரு இமிட்டேஷன். உங்களைப்போன்ற ஒரு செயற்கை. அவ்வளவுதான். இதையெல்லாம் சொல்லணும்னு தோணிச்சு ரஜினி அங்கிள்.



அப்புறம் ரஜினி அங்கிள் ஹேப்பி பர்த்த்டே அங்கிள். வாங்க அங்கிள்… நீங்க நான் மீனா அப்புறம் எல்லா ஃப்ரெண்ட்ஸும் போயி விளையாடலாம். ஆனா இந்த முறை நீங்க ஒளிஞ்சுக்குங்க. சரியா?


”ரஜினி அங்கிள்! நீங்க எங்க இருக்கீங்க? எங்க? எங்க? ஹஹஹஹா! ஹஹஹஹா!"

Wednesday, August 28, 2013

கை மணம் மண்மணம் சமணம்

மதுரையில் நடந்த விருட்சத் திருவிழா மலைகளுக்கான விழா, குழந்தைகளுக்கான விழா என்பதையும் தாண்டி குடும்பங்களுக்கான விழாவாகவும் இருந்தது.

நிகழ்வில் வெளியிடப்பட்ட “மதுர வரலாறு” நூலைப் பெற்றுக் கொண்டவர் செட்டிப்புடவு மலையடிவாரத்தில் பதினைந்து வருடங்களாக பருத்திப்பால் விற்கும் ”ஜெயமணி அம்மாள்” என்பதே நிகழ்வின் சிறப்புக்குச் சான்று.

பிரம்மாண்டக் குடையாய் விரிந்த ஆலமர நிழலில் நிகழ்வரங்கம். அருகே தாமரைப் பூத்த தடாகம், சுறுசுறுப்பான தன்னார்வலர்கள், இயற்கை உணவு, கிட்டிப்புள், பரமபதம், பம்பரம், பல்லாங்குழி, கலைடாஸ்கோப் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பரிசுகள், ஓரிகமி, க்ளே மாடலிங், படம் வரைதல், கட்டுரை, செய்கைப் பாடல்கள் முதலிய செயல்பாடுகள், நடமாடும் கழிவறை என அனைத்து ஏற்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை.

நிகழ்வு நடந்த நேரம் முழுதும் சமர்த்தாகத் தூங்கி, நிகழ்வு முடிந்த பிறகுக் கண்விழித்து நடந்து, ஓடி, விளையாடித் தனது முழு ஒத்துழைப்பையும் நல்கிய ”அனன்யா”  பசுமை நடைக் குழுவின் இளைய அங்கத்தினர்.

எந்த ஒரு நிகழ்வின் வெற்றியும் அதற்கான திட்டமிடுதலையும் அதைச் செயல்படுத்துபவர்களையும் சார்ந்தே அமைகிறது. அதற்கு விருட்சத் திருவிழா ஒரு உதாரணம். விழா முடிந்த பிறகு நடந்த தன்னார்வலர் கூட்டத்தின்போது அனைவருக்கும் வழங்கப்பட்ட பருத்திப் பாலில் ஜெயமணி அம்மாளின் கைமணமும், மதுர மண் மணமும் 



Thursday, March 28, 2013

ஏழாம் வகுப்புத் துக்கம்



அப்போது ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்.  ஜூலை மாதத்தின் ஒரு நாள் பள்ளி விட்டு வீடு வந்தபோது அம்மா காட்டாஸ்பத்திரிக்கு (லியோனார்டு மருத்துவமனை) போயிருப்பதாகச் சொன்னார்கள், ஹேமஸ்ரீ, பேரன்பு தமிழன், அவனது அம்மா காயத்ரி ஆகியோர் பிறந்ததும் அங்குதான்.. தம்பிப் பாப்பாவோ தங்கச்சி பாப்பாவோ பிறக்கப் போகிறதென்று புரிந்தது.  கையில் இருந்த பத்துப் பைசாவை வைத்துக்கொண்டு வரப்போகும் பாப்பாவுக்கு என்ன வாங்கித் தருவது என்று தெரியவில்லை. யூனிஃபார்மைக் கூட மாற்றாமல் அப்படியே காட்டாஸ்பத்திரிக்கு ஓடினேன். நடு இரவில் சற்றே நீலநிறத்திலிருந்த குட்டிப்பாப்பாவை அவசர அவசரமாய்க் கண்ணீல் காட்டிவிட்டு உடனே வேறொரு அறைக்குள் கொண்டுபோய்விட்டனர். பிறகு பத்து நாட்கள் கழித்து நானும் அம்மாவும் குட்டிப் பாப்பாவுடன் வீட்டுக்கு வந்தோம். அடிக்கடி மூச்சுத் திணறல் வந்து அவதியுறுவாள் ரேவதிப் பாப்பா.
*************************
அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஃபிப்ரவரி மாதத்தின் ஒரு நாள் மாலை பள்ளி விட்டு வீடு வந்தபோது ரேவதி பாப்பாவுக்கு காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. நானும் அம்மாவும் ரேவதி பாப்பாவைத் தூக்கிக்  கொண்டு அதே காட்டாஸ்பத்திரிக்குப் போனோம். ஏதேதோ கஷ்டமான இங்கிலீஷ் பெயர்களைச் சொன்னார்கள். மதுரை பெரியாஸ்பத்திரிக்குப் போகச் சொன்னார்கள். போனோம்….. இடது கையும், இடது காலும் செயலிழந்த நிலையில் அன்றிரவே அவள் இறந்து விட்டிருந்தாள்.
******************************
     அப்போது எம். எஸ்சி படித்துக் கொண்டிருந்தேன். கவிதா மைதிலி மேடம் உடல் ஊனம் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.  ஸ்பைனா பைஃபைடா (முதுகுத் தண்டு வட அழற்சி) , என்கஃபலைட்டிஸ் (மூளைக் காய்ச்சல்), செரிப்ரல் பால்ஸி (மூளை முடக்குவாதம்) என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன. அவை….நான் ஏழாம் வகுப்பு படிக்கையில் காதில் விழுந்த அதே கஷ்டமான இங்கிலீஷ் வார்த்தைகள். அந்த கஷ்டமான இங்கிலீஷ் வார்த்தைகள் காதில் விழும்போதெல்லாம்  அந்த ஏழாம் வகுப்புத் துக்கத்தில் உழல்வது தவிர்க்க முடியாதது. நேற்றிரவிலிருந்து அதே மனநிலை. 
********************************
எனினும் இந்தக் கெடு கெட்ட உலகத்தில் வாழப் பிடிக்காமல் பறந்து போன அனைத்து தேவதைகளின் பாதங்களுக்கும் அன்பு முத்தங்கள் தந்து துடைத்துக் கொள்கிறேன் அந்த ஏழாம் வகுப்பு துக்கத்தை.

Thursday, August 16, 2012

திருவிழா



இன்று எங்கள் ஊரில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரசித்தி பெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழாவின் கடைசி நாள்.     தேவராட்டம், சேவையாட்டங்களுடன் கூடவே கலர் பலூன்கள், பல நிறங்களில் சர்பத், பீம புஷ்டி ஹல்வா, ராட்டினங்கள், பொரி கடலை, வாணவெடிகள், லவுட் ஸ்பீக்கர் பாடல்கள், மொட்டைத்தலைகள், தீச்சட்டி... இன்னும், இன்னும்..........  சிறுவயதில் நான், சாந்தி, லதா, முருகேஸ்வரி, பாண்டி, ராஜ்குமார், எல்லோரும் திருவிழாவில் சுற்றி வருவோம். இரவில் பாட்டுக் கச்சேரிக்கு சாக்கு போட்டு இடம் பிடிப்பதும், பிடித்த நடிகர்கள் பாடல் வந்தால் விசிலடித்து கை தட்டுவதும் என ஒரே ரகளைதான். இந்த திருவிழாவில் லதாவையும் சாந்தியையும் தவிர எல்லாரும் அவரவர் குடும்பத்துடன் தனித்தனியே வந்திருந்தோம். நலம் விசாரித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது. சாந்திக்கு இன்றுதான் திருமணம், லதாவை இதய நோய்க் காவு கொண்டு ஐந்தாண்டுகளாகி விட்டன. இப்போது பாண்டியுடன் பேசுவதில்லை. குடும்பச் சண்டை (?). இந்தாண்டு பாட்டுககச்சேரி இல்லை. இருந்திருந்ததாலும் சாக்குப் போட்டு...., இடம் பிடித்து...., பொரி கடலை தின்று...,  கைதட்டி...., விசிலடித்து............. நடக்கிற காரியமாகப்படவில்லை.

வருடத்திற்கு வருடம் திருவிழாக் கூட்டம் அதிகனமானாலும் பரிச்சய முகங்கள் அதிகமாகவே இருந்தன. விடலைப் பருவத்தில் ரகசியமாய் ரசித்த முகங்களையும் காண நேர்ந்த தற்செயலில் விஞ்சி நின்றது சிறு பரவசம், ஆனால் காதோர நரையும், குடும்பஸ்தர்களாகி விட்ட அன்னிய உணர்வும் மெல்லிய வலியைச் சொருகின .    

ஹேமஸ்ரீக்கு பலூன் வாங்கிய மீதிச் சில்லறையில் வந்த பத்து ருபாய்த் தாள்கள் ஒன்றில் // நிலவே உன்னிடம் இந்த ரூபாய் இருக்கும் வரை நான் இருப்பேன்// என்ற கிறுக்கலான கையெழுத்து. இப்போது அந்த நிலவும் நிலவுக்குப் பணம் கொடுத்தவரும் என்ன ஆகியிருப்பார்கள் என்ற கவலை...............(தேவைதான்). இதே போன்றொதொரு வாசகத்துடன் ஆனால் திருத்தமான கையெழுத்துடன்  ஒரு புத்தம் புது ஐந்து ரூபாய் நோட்டை வெகு நாட்கள் நானும் மிகப் பத்திரமாய் வைத்த்ருந்தேன்.   இப்போது அது எந்தத் திருவிழாவிலோ....? யார் கையிலோ...?

வாழ்க்கைக் கல்வி




கடந்த மூன்று மாதங்களாகத் தரவுகளுக்காக கிராமம் கிராமமாக சென்றுகொண்டிருக்கிறோம். நேற்றும் ஒரு கிராமம். எனது பள்ளித் தோழி அஞ்சலையைச் சந்தித்தேன்.பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறிவிட்டதால் உடனேயே திருமணம். நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். முதல் பெண் பன்னிரண்டாவது படிக்கிறாளாம். ஹேமஸ்ரீ LKG(?). அஞ்சலையும் அவளது கணவரும் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். சொந்தமாக ஒரு வீடும் கொஞ்சம் நகையும் சேர்த்து வைத்திருப்பதாகவும். தனது மூத்த பெண்ணை ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்க வைக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெகு நாட்கள் கழித்த சந்திப்பு என்பதால் பள்ளி காலத்தில் செய்த சேட்டைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் (இங்கே சொல்வதற்கில்லை). இருவரது பேச்சும் தற்காலத்திற்குத் திரும்பியபோது, அஞ்சலை எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்திருந்தாள். வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனங்களை அனாயாசமாக அதே நேரம் அணித்தரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். நானும் பொறுப்பாகத் தலையாட்டிக் கொண்டே இருந்தேன். அவளது பேச்சின் விஸ்தாரமும், வீரியமும், உண்மைகளும் என்னைப் பேச்சற்றவளாக மாற்றியிருந்தன. அஞ்சலையின் வாழ்க்கை பற்றிய புரிதல்களும் சித்தாந்தங்களும் இது நாள் வரை வாழ்க்கையைப் பற்றிய எனது கற்பிதங்களை தவிடு பொடியாக்கின. அஞ்சலை மிக உயரத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.

அன்றைய மதிய உணவை அவள் வீட்டிலேயே முடித்து விட்டுக் கிளம்பி வந்து கொண்டிருந்த போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது, ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது ஸ்டடி பீரியடில் இதே அஞ்சலைக்கு நான் க்ரூப் லீடராக இருந்திருக்கிறேன். நான் சொல்லித் தரும் பாடங்களையெல்லாம் அவள் பொறுப்பாகக் கேட்டுக் கொண்டேயிருப்பாள். நேற்று நான் தலையாட்டிக் கொண்டிருந்தது போலவே......