Total Pageviews

Wednesday, October 14, 2015

இரயில் பயணங்களில்….(கோழிக்கோடு பயணம் தொடர்ச்சி)


கோழிக்கோட்டிற்குச் செல்வதற்கு பகல்நேர ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுத்திருந்தோம். பெரும்பாலும் இரவு நேர ரயில் பயணங்களையே அனுபவித்திருந்த ஹேமாவுக்கு பகல்நேரப் பயண ஏற்பாடு குதூகலத்தைக் கூட்டியிருந்தது.

கேரளாவின் ஒரு திசை முழுதும் கடற்கரைகள்தான் என்றும் அரேபியப் பெருங்கடல் அந்தக் கடற்கரைகளில் இருப்பதாகவும், அங்கே யாரும் தமிழ் பேசுவதில்லையென்றும் தகவல்களை அடுக்கியபடியே வந்தாள். வழியெங்கும் மீன், தேங்காய், நேந்திரம் பழம், புட்டு, கடலைக் கறி, ஓணம், மலையாளம், படகுப்போட்டி என கேரளாவைப் பற்றி GK புத்தகத்தில் படித்திருந்தவையெல்லாம் வரிசையாக வந்து கொண்டேயிருந்தன. இடையிடையே உனக்குத் தெரியுமா என்கிற கேள்வி வேறு.

பாலக்காடு தாண்டி மன்னனூர் வந்ததும் “அய்ய்ய் அம்மா கடல் கடல்!” என்று குதிக்கத் துவங்கினாள். அதற்குள் எப்படி கடல் வரும் என்று ஆச்சர்யத்துடன் எட்டிப்பார்த்தால் அங்கே ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ”அது கடல் இல்லடா” பாப்பா, ஆறு!” என்று சொன்னபோது அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவளது குதூகல மனம் இல்லை. மயிலாடுதுறையில் பணி செய்தபோது அங்கிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் வழியில் நிறைய குளங்களைப் பார்த்திருக்கிறாள். சென்னையிலும் நாகப்பட்டினத்திலும் வேளாங்கண்ணியிலும் கடல் பார்த்திருக்கிறாள். சிறிய நீர்ப்பரப்பைக் குளமென்றும், பரந்து விரிந்த நீர்ப்பரப்பைக் கடலென்றும் அறிந்து வைத்திருந்த அவளுக்கு இரண்டுக்கும் இடைப்பட்ட ஓடும் நீர்நிலையை ஆறு என ஏற்றுக் கொள்வதில் அநேக சிரமங்கள் இருந்தன. ஆறு என்பதை பாடப்புத்தகத்தில் தூரத்து லேண்ட் ஸ்கேப் ஓவியத்தில் ஒரு வளைகோட்டைப்போல பார்த்ததும், நான் அவளை இது வரை ஆறு பார்க்கக் கூட்டிச் சென்றதில்லை என்பதும், ஆறெனப்பட்ட அனைத்தும் தற்போது வறண்டு கிடப்பதும்  அவற்றுள் சில. வலிந்து விளக்கிச் சொல்ல முற்படுகையில் போம்மா! என்றவாறு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டாள்.

எதிரில் அமர்ந்திருந்த ஒரு கேரளப் பெண் “It’s a river மோளே. Not a sea.   என்றதும் சற்று நம்பிக்கை வந்தவளாய்  என்னைப் பார்க்க “அதைத்தானடி நானும் சொன்னேன்!” என்ற முகபாவனையில் நான் அவளைப் பார்க்க, அய்யோ பாவம் என்று சிரித்துவைத்தாள். ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை இருக்கும். கடலுக்கு ஒரு கரைதான் கண்ணுக்குத் தெரியும். கடல் நீர் உப்புக்கரிக்கும். ஆற்றுநீர் கரிப்பதில்லை என அந்தப் பெண் இவளுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லிக் கொண்டே வர அக்கறையாய்க் கேட்டுக் கொண்டாள்.

Bear hunt rhymes ல வருமே அந்த மாதிரி ஆறாம்மா?
Yes, It’s a river!  என்று நான் ஆரம்பிக்கவும் அவளுக்கு பிடித்தமான bear hunt பாடலை Michael Rosen கண்களை உருட்டிக் கொண்டு பாடுவதைப் போலவே அந்த கேரளப்பெண்ணிற்குப் பாடிக்காட்ட ஆரம்பித்தாள்.

We are going on a bearhunt, going to catch a big one
What a beautiful day, we are not scared
Oh o… It’s a river
Deep…. Cold…. river!”
We cant go over it, We cant go under it
Oh no! we gotta go through it
Spilsh! Splosh! Splish! Splosh!

நானும் இதைத்தான் சொன்னேன். பக்கி நம்பவில்லை. எந்தக் குழந்தைதான் அம்மா சொல்வதை நம்புகிறது?  அடுத்த ஸ்டேஷனில் அந்தக் கேரளப்பெண் இறங்கிக் கொள்ள சற்று தூரம் சென்றதும் மீண்டும் ஒரு நதி குறுக்கிட்டது. 
"அம்மா அங்க பாரு ஆறு!" மீண்டும் குதிப்பு. 
திடீரென்று ”அம்மா! ஆத்துக்குள்ள பாலைவனம்”.
இதென்னடா அடுத்த வம்பு என்று எட்டிப்பார்த்தால் அந்த ஆற்றில் தன்னீர் வறண்ட பகுதியில் ஒரு மணற்பரப்பு.
”ஷ்ஷ்ஷப்பா முடியலையே…!” எனது மைண்ட் வாய்ஸ் அவளுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ”பாப்பா இது பாலைவனம் இல்லை. ஆத்துல தண்ணி வத்திப் போகும்போது மணல் தெரியும்! அதுதான் இது”
 அவளுக்கு எரிச்சல் மேலிட்டிருக்கவேண்டும். "லூசு அம்மா!” அவள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டது.
 ”போம்மா மணல் இருந்தா அது டெஸர்ட் தான்”. சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அழைத்துப்பார்த்தும் என் பக்கம் திரும்பவேயில்லை. என்ன சொல்லி புரியவைப்பது? அந்தக் கேரளப் பெண் இருந்திருந்தால் சற்றுத் தேவலை என்று தோன்றியது.

ரயில் பரப்பனங்காடி ஸ்டேஷன் தாண்டி சிறிது நேரம் சென்றதும்
”நம்ம ஊர்ல ஆறே கிடையாதாம்மா? அடுத்த கேள்வி.
இருக்கே! நம்ம ஊர் ஆத்துப் பாலம் இருக்கே அதுக்குக் கீழ இருக்கறது ஆறுதான்.
ஆனா அதுல தண்ணியே இல்ல?.
மழை பேய்ஞ்சா வரும்.
மழையில்லாட்டி?
வராது.
ஏம்மா?

எனக்கு ”If you can't explain it to a six year old, you dont really understand it" என்கிற வாசகம்தான் நினைவுக்கு வந்தது. இவளுக்கு ஏழு வயது. பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லை.

ஏன் வறண்டு போச்சு? ஏன் மழை வரலை? ஏன் மரமெல்லாம் வெட்டணும்? கேள்விகள் வந்து விழுந்துகொண்டே இருக்க எனக்கு கோழிக்கோடு வந்துவட்டால் பரவாயில்லை என்று தோன்றியது.

வீட்டுக்குப் பின்புறம் கண்மாயையும், கோடை விடுமுறைக்குச் செல்லும் அத்தை ஊரில் ஆற்றையும் அனுபவித்தவளின் மகளுக்கு ஒரு நீர்நிலையை நதியா குளமா கடலா என்று அடையாளப்படுத்த இயலவில்லை. குழாயிலும், டேங்கிலும் பாட்டிலிலுமே  தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருக்கிற தலைமுறை.  இன்னதென்று தெரியாமல் மேலிட்ட ஒரு குற்றவுணர்வு குறுகுறுவென்று அரிக்கத் துவங்கியதை மறுப்புக்காட்டாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டேன்.  நதியைக் கடலென்று அடையாளப்படுத்தியதும், நதிக்குள்ளே பாலைவனத்தைக் கண்டடைந்த திணைபேதமும் அவள் குற்றமல்ல.  ”அவள்” என்கிற அவள் தலைமுறையின் குழப்பத்திற்கும் கேள்விக்கும் நீராதாரத்திற்கும் ”நான்” என்கிற என் தலைமுறை  என்ன பதில் வைத்திருக்கிறது?


3 comments:

JJMemiChinna said...

Nice one...though it was said in a funny way..it makes us to think..We used to write an essay in our childhood that " Aaru tthan varalaru kooruthal", " Maram tthan varalaru kooruthal". I don't know still they follow in the current syllabus. At least through which this generation can learn about it..no other choice :(
~Hema

JJMemiChinna said...

Nice one...though it was said in a funny way..it makes us to think..We used to write an essay in our childhood that " Aaru tthan varalaru kooruthal", " Maram tthan varalaru kooruthal". I don't know still they follow in the current syllabus. At least through which this generation can learn about it..no other choice :(
~Hema

Unknown said...

அருமையான பதிவு.ஒரு பயணத்தில் நடப்பெற்ற ஒரு குழந்தையுடனான உரையாடலுள் சமூகத்துக்கான செய்திகள் புதைந்து கிடக்கின்றன.
[வீட்டுக்குப் பின்புறம் கண்மாயையும், கோடை விடுமுறைக்குச் செல்லும் அத்தை ஊரில் ஆற்றையும் அனுபவித்தவளின் மகளுக்கு ஒரு நீர்நிலையை நதியா குளமா கடலா என்று அடையாளப்படுத்த இயலவில்லை] - என்னும் பதிவு ஆசிரியரின் கூற்றில் பூகோளத்தின் வரலாறு இப்படி ஆகி விட்டதே எனும் கோபமும் ஆற்றாமையும் பீறிடுகிறது.

[நதியைக் கடலென்று அடையாளப்படுத்தியதும், நதிக்குள்ளே பாலைவனத்தைக் கண்டடைந்த திணைபேதமும் அவள் குற்றமல்ல. "அவள்" என்கிற அவள் தலைமுறையின் குழப்பத்திற்கும் கேள்விக்கும் நீராதாரத்திற்கும் "நான்" என்கிற என் தலைமுறை என்ன பதில் வைத்திருக்கிறது?] என்பதுக்கான
பதில்கள் நிச்சயம் சோகம் தருவனவாகவே இருக்கும். திணை பேதம் இலக்கிய நயமான அருமையான சொல்லாடல்.

எல்லாம் சரி.... நாங்களும்தான் பயணம் செல்கிறோம். எங்கள் குழந்தைகள், எதிர் இருக்கை குழந்தைகள் ஏதேதோ அறிவாகத்தான் ஹெமாவைப் போன்று சிந்திக்கின்றனர். பேசுகின்றனர். எங்களுக்குத்தான் ஹேமாவின் அம்மா போன்று ஆழ்பார்வை இயல்பாகவே வருவதில்லை.அதி சற்று வருத்தம்தான். -அ.இலட்சுமண சிங்-