Total Pageviews

Thursday, August 16, 2012

திருவிழா



இன்று எங்கள் ஊரில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரசித்தி பெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழாவின் கடைசி நாள்.     தேவராட்டம், சேவையாட்டங்களுடன் கூடவே கலர் பலூன்கள், பல நிறங்களில் சர்பத், பீம புஷ்டி ஹல்வா, ராட்டினங்கள், பொரி கடலை, வாணவெடிகள், லவுட் ஸ்பீக்கர் பாடல்கள், மொட்டைத்தலைகள், தீச்சட்டி... இன்னும், இன்னும்..........  சிறுவயதில் நான், சாந்தி, லதா, முருகேஸ்வரி, பாண்டி, ராஜ்குமார், எல்லோரும் திருவிழாவில் சுற்றி வருவோம். இரவில் பாட்டுக் கச்சேரிக்கு சாக்கு போட்டு இடம் பிடிப்பதும், பிடித்த நடிகர்கள் பாடல் வந்தால் விசிலடித்து கை தட்டுவதும் என ஒரே ரகளைதான். இந்த திருவிழாவில் லதாவையும் சாந்தியையும் தவிர எல்லாரும் அவரவர் குடும்பத்துடன் தனித்தனியே வந்திருந்தோம். நலம் விசாரித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது. சாந்திக்கு இன்றுதான் திருமணம், லதாவை இதய நோய்க் காவு கொண்டு ஐந்தாண்டுகளாகி விட்டன. இப்போது பாண்டியுடன் பேசுவதில்லை. குடும்பச் சண்டை (?). இந்தாண்டு பாட்டுககச்சேரி இல்லை. இருந்திருந்ததாலும் சாக்குப் போட்டு...., இடம் பிடித்து...., பொரி கடலை தின்று...,  கைதட்டி...., விசிலடித்து............. நடக்கிற காரியமாகப்படவில்லை.

வருடத்திற்கு வருடம் திருவிழாக் கூட்டம் அதிகனமானாலும் பரிச்சய முகங்கள் அதிகமாகவே இருந்தன. விடலைப் பருவத்தில் ரகசியமாய் ரசித்த முகங்களையும் காண நேர்ந்த தற்செயலில் விஞ்சி நின்றது சிறு பரவசம், ஆனால் காதோர நரையும், குடும்பஸ்தர்களாகி விட்ட அன்னிய உணர்வும் மெல்லிய வலியைச் சொருகின .    

ஹேமஸ்ரீக்கு பலூன் வாங்கிய மீதிச் சில்லறையில் வந்த பத்து ருபாய்த் தாள்கள் ஒன்றில் // நிலவே உன்னிடம் இந்த ரூபாய் இருக்கும் வரை நான் இருப்பேன்// என்ற கிறுக்கலான கையெழுத்து. இப்போது அந்த நிலவும் நிலவுக்குப் பணம் கொடுத்தவரும் என்ன ஆகியிருப்பார்கள் என்ற கவலை...............(தேவைதான்). இதே போன்றொதொரு வாசகத்துடன் ஆனால் திருத்தமான கையெழுத்துடன்  ஒரு புத்தம் புது ஐந்து ரூபாய் நோட்டை வெகு நாட்கள் நானும் மிகப் பத்திரமாய் வைத்த்ருந்தேன்.   இப்போது அது எந்தத் திருவிழாவிலோ....? யார் கையிலோ...?

வாழ்க்கைக் கல்வி




கடந்த மூன்று மாதங்களாகத் தரவுகளுக்காக கிராமம் கிராமமாக சென்றுகொண்டிருக்கிறோம். நேற்றும் ஒரு கிராமம். எனது பள்ளித் தோழி அஞ்சலையைச் சந்தித்தேன்.பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறிவிட்டதால் உடனேயே திருமணம். நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். முதல் பெண் பன்னிரண்டாவது படிக்கிறாளாம். ஹேமஸ்ரீ LKG(?). அஞ்சலையும் அவளது கணவரும் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். சொந்தமாக ஒரு வீடும் கொஞ்சம் நகையும் சேர்த்து வைத்திருப்பதாகவும். தனது மூத்த பெண்ணை ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்க வைக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெகு நாட்கள் கழித்த சந்திப்பு என்பதால் பள்ளி காலத்தில் செய்த சேட்டைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் (இங்கே சொல்வதற்கில்லை). இருவரது பேச்சும் தற்காலத்திற்குத் திரும்பியபோது, அஞ்சலை எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்திருந்தாள். வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனங்களை அனாயாசமாக அதே நேரம் அணித்தரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். நானும் பொறுப்பாகத் தலையாட்டிக் கொண்டே இருந்தேன். அவளது பேச்சின் விஸ்தாரமும், வீரியமும், உண்மைகளும் என்னைப் பேச்சற்றவளாக மாற்றியிருந்தன. அஞ்சலையின் வாழ்க்கை பற்றிய புரிதல்களும் சித்தாந்தங்களும் இது நாள் வரை வாழ்க்கையைப் பற்றிய எனது கற்பிதங்களை தவிடு பொடியாக்கின. அஞ்சலை மிக உயரத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.

அன்றைய மதிய உணவை அவள் வீட்டிலேயே முடித்து விட்டுக் கிளம்பி வந்து கொண்டிருந்த போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது, ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது ஸ்டடி பீரியடில் இதே அஞ்சலைக்கு நான் க்ரூப் லீடராக இருந்திருக்கிறேன். நான் சொல்லித் தரும் பாடங்களையெல்லாம் அவள் பொறுப்பாகக் கேட்டுக் கொண்டேயிருப்பாள். நேற்று நான் தலையாட்டிக் கொண்டிருந்தது போலவே......


Thursday, August 2, 2012

ரசகுல்லா மாயாண்டி


பெரியம்மாவாகியிருக்கிறேன்!!!!!!!!!!!!!

பெண்களால் நிறைந்த என் தாய் வழிச் சமூகத்தில் முதல் ஆணாக வந்து பிறந்தவரை நேற்று இரவு பத்து மணி இருபது நிமிடங்களுக்குக் கண்ணில் காட்டினார்கள்.  ஹேமஸ்ரீயின் ஆசைப்படியே கிருஷ்ணாத் தம்பி (போகோ அலைவரிசையின்  கார்ட்டூன் பாத்திரம்) பிறந்திருக்கிறார். வயிற்றுக்குள் இருக்கும் போது தன் அம்மா ஆசைப்பட்டு ரசகுல்லா சாப்பிட்ட நேரங்களில் மட்டும் அதிகமான அசைவுகளைக் காட்டியவர் என்பதால் அவருக்கு "ரசகுல்லா மாயாண்டி" என்ற செல்லப் பயரும் இருக்கிறது.


கன்னத்தைத் தடவி "குட்டித் தம்பீ..." என்று அழைத்த போது குட்டிக் கண்களால் விழித்துப் பார்த்தவர் "ஹ்ஹூ...ம்" என்று மிரட்டிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டார். நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது பிறந்த என் தங்கை காயத்ரியை முதன் முதலில் கையில் வாங்கியவள் நான்தான். இப்போது அவள் குழந்தையையும்.... அவ்வகையில் அவர் என் குழந்தையின் குழந்தை.  அவரைக் "கொண்டாடவும்", "குறிப்பறிந்து பணி செய்யவும்" தயாராகிக் கொண்டிருக்கிறேன்.


இன்னும் நான்கு வாரங்கள் முழுதாய் இருக்க அவசரக் குடுக்கையாக வந்துவிட்டவரை இப்போது கண்ணாடிப் பெட்டி அடைகாத்துக் கொண்டிருக்கிறது. தம்பியுடன் நேரத்தைக் கழிக்க ஹேமஸ்ரீ இப்போதிருந்தே திட்டமிடத் துவங்கிவிட்டாள். இருந்தாலும் waiting for the super hit episodes of Sibling Rivalry.