Total Pageviews

Friday, December 12, 2014

கெட்ட பய காளி, பத்த வச்ச பரட்டை


அன்புள்ள ரஜினி அங்கிள், 



நான் உங்கள் ரசிகை அல்ல. உங்களுடன் நடித்த நடிகைகளின் கவுன்களுக்கு ரசிகையாய் இருந்தேன். ஆனாலும் தளபதி, அன்புள்ள ரஜினிகாந்த், தம்பிக்கு எந்த ஊரு, நெற்றிக்கண், தில்லுமுல்லு, முள்ளும்மலரும், நினைத்தாலே இனிக்கும், பதினாறு வயதினிலே மூன்று முடிச்சு ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதுவும் அந்த ”கெட்ட பய காளியும், பத்த வச்ச பரட்டையும்”. சான்சே இல்லை அங்கிள். அட அதை விடுங்கள் அங்கிள். நான் சொல்ல வந்தது வேறு.



எனக்கு ஒரு அத்தை மகன் இருக்கிறான். உங்களின் அதி தீவிர ரசிகன். அவன் பெயர் கண்ணன். உங்களுக்காக தன் பெயரையே மாற்றி தன்னைத்தானே  “ரஜினிக்கண்ணன்” அழைத்துக் கொண்டவன். இப்போதும்கூட ஊரே அவனை அப்படித்தான் அழைக்கிறது. உங்கள் மீது கொண்ட வெறித்தனமான பாசத்தாலும், பைத்தியக்காரத்தனமான அன்பினாலும் அடர்த்தியான அவன் முடியை இடது நெற்றியின் மேற்புறம் ஒரு ஓரமாக மழித்துக் கொண்டு அரை வழுக்கையில் (உங்கள் ஸ்டைலில்) அலைவான். உங்களைப் போலவே உடை உடுத்திக்கொண்டு, பேசிக்கொண்டு, ஸ்டைல் எல்லாம் செய்துகொண்டு அப்பப்ப்பப்ப்பா… அவனைப் பார்க்கும்போதெல்லாம் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும். எனக்கும் அவனைக் கொஞ்சோண்டு பிடிக்கும் :-P



எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில் எந்த ஊரில் எந்த திருவிழா நடந்தாலும் அங்கே நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் உங்களைப்போலவே நடனமாடிக்கொண்டிருப்பான். உங்களைப்போலவே  உடை உடுத்திக்கொண்டு, உங்களைப்போலவே மேக்கப் போட்டுக்கொண்டு உங்களைப்போலவே காட்டிக்கொள்ள மிகவும் மெனக்கெட்டு, மேடையில் ஆடி அசத்திவிடுவான்.  



”ஒரு மைனா மைனாக்குருவி மனசோடு பாடுது என்று மூன்று பெண்களுடன் சேர்ந்து அவன் ஆடும்போது சற்று பொறாமையாக இருக்கும். ”அத்த மக ராசி! அத ஊர் முழுக்க பேசி! கொட்டு மேளம் கொட்டி வாசி!” என்ற வரிகளுக்கு இருக்கிற அத்தனை அத்தை மகள்களையும் சுட்டிக்காட்டுவான். நாங்களெல்லாம் விசிலடித்து கைதட்டுவோமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ரஜினிக் கண்ணனுக்கு என்னைப்போல் எக்கச்சக்க ரசிகைகள். இப்போதும் சொல்கிறேன் குறித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ரசிகை அல்ல.  இப்படி நடனமாட போன இடத்தில் ஒரு பெண்ணை டாவடித்து கல்யாணம் செய்துகொண்டு மதுரைக்குப் பக்கத்தில் செட்டில் ஆகிவிட்டான். முதல் மனைவியும் அவன் பிள்ளைகளும் இதோ அடுத்த தெருவில் தான் இருக்கிறார்கள்.  அவனைக் கடைசியாகப் பார்த்து ஒரு இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும்.  



கிடத்தட்ட படையப்பா படத்துக்குப் பிறகு வந்த எல்லாத் திரைப்படங்களிலும்  ரஜினி படத்தில் வருகிற ரஜினி, ரஜினியைப் போலவே இல்லை ரஜினி அங்கிள். ரஜினிக்கண்ணன் போன்ற யாரோ ஒருவர் ரஜினி வேஷம் கட்டி நடிப்பது போலவே தெரிகிறது ரஜினி அங்கிள். என்னத்தைச் சொல்ல. இதோ இந்த லிங்கா படத்து போஸ்டரில்கூட ரஜினிக் கண்ணன் தான் தெரிகிறான் ரஜினி அங்கிள். அந்தப் படத்து விளம்பரத்துல கூட உங்களை மாதிரி யாரோ வேஷம் கட்டி ஆடுகிறார்கள் ரஜினி அங்கிள். ஆனா உங்கள் அசல் ஸ்டைல் அதில் இல்லை அங்கிள். ஆமா அங்கிள். சற்றே தூக்கலான மேக்கப் போட்ட, அடர்த்தியாய் லிப்ஸ்டில் போட்ட , உங்களைப் போலவே விக் வைத்துக்கொண்ட உங்களைப் போலவே ஸ்டைல் காட்டுகிற ”சற்றே வயதான” ரஜினிக் கண்ணன்தான் அங்கிள் அங்கே ஆடுகிறான். அது நீங்கள் இல்லை.



விசாரித்துப் பார்த்தால் அவன் உங்களைப்போல் வேஷம் கட்டி ஆடுவதிலிருந்து ரிட்டையராகி விட்டானாம்.  மதுரைப் பக்கம் பெயிண்ட்டராக இருப்பதாகத் தகவல். எனில் லிங்கா படத்தில் வருவது யார் அங்கிள்? நிச்சயமாக அது நீங்கள் இல்லை. உங்கள் ஸ்டைல் இல்லை. உங்கள் குரல் இல்லை. உங்களைப் போன்ற ஒரு வேஷம். உங்களுடையதைப் போன்ற ஒரு  ஸ்டைல். உங்களுடையதைப் போன்ற ஒரு குரல். உங்களைப் போல் செய்துகொண்ட ஒரு இமிட்டேஷன். உங்களைப்போன்ற ஒரு செயற்கை. அவ்வளவுதான். இதையெல்லாம் சொல்லணும்னு தோணிச்சு ரஜினி அங்கிள்.



அப்புறம் ரஜினி அங்கிள் ஹேப்பி பர்த்த்டே அங்கிள். வாங்க அங்கிள்… நீங்க நான் மீனா அப்புறம் எல்லா ஃப்ரெண்ட்ஸும் போயி விளையாடலாம். ஆனா இந்த முறை நீங்க ஒளிஞ்சுக்குங்க. சரியா?


”ரஜினி அங்கிள்! நீங்க எங்க இருக்கீங்க? எங்க? எங்க? ஹஹஹஹா! ஹஹஹஹா!"

Wednesday, August 28, 2013

கை மணம் மண்மணம் சமணம்

மதுரையில் நடந்த விருட்சத் திருவிழா மலைகளுக்கான விழா, குழந்தைகளுக்கான விழா என்பதையும் தாண்டி குடும்பங்களுக்கான விழாவாகவும் இருந்தது.

நிகழ்வில் வெளியிடப்பட்ட “மதுர வரலாறு” நூலைப் பெற்றுக் கொண்டவர் செட்டிப்புடவு மலையடிவாரத்தில் பதினைந்து வருடங்களாக பருத்திப்பால் விற்கும் ”ஜெயமணி அம்மாள்” என்பதே நிகழ்வின் சிறப்புக்குச் சான்று.

பிரம்மாண்டக் குடையாய் விரிந்த ஆலமர நிழலில் நிகழ்வரங்கம். அருகே தாமரைப் பூத்த தடாகம், சுறுசுறுப்பான தன்னார்வலர்கள், இயற்கை உணவு, கிட்டிப்புள், பரமபதம், பம்பரம், பல்லாங்குழி, கலைடாஸ்கோப் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பரிசுகள், ஓரிகமி, க்ளே மாடலிங், படம் வரைதல், கட்டுரை, செய்கைப் பாடல்கள் முதலிய செயல்பாடுகள், நடமாடும் கழிவறை என அனைத்து ஏற்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை.

நிகழ்வு நடந்த நேரம் முழுதும் சமர்த்தாகத் தூங்கி, நிகழ்வு முடிந்த பிறகுக் கண்விழித்து நடந்து, ஓடி, விளையாடித் தனது முழு ஒத்துழைப்பையும் நல்கிய ”அனன்யா”  பசுமை நடைக் குழுவின் இளைய அங்கத்தினர்.

எந்த ஒரு நிகழ்வின் வெற்றியும் அதற்கான திட்டமிடுதலையும் அதைச் செயல்படுத்துபவர்களையும் சார்ந்தே அமைகிறது. அதற்கு விருட்சத் திருவிழா ஒரு உதாரணம். விழா முடிந்த பிறகு நடந்த தன்னார்வலர் கூட்டத்தின்போது அனைவருக்கும் வழங்கப்பட்ட பருத்திப் பாலில் ஜெயமணி அம்மாளின் கைமணமும், மதுர மண் மணமும் 



Thursday, March 28, 2013

ஏழாம் வகுப்புத் துக்கம்



அப்போது ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்.  ஜூலை மாதத்தின் ஒரு நாள் பள்ளி விட்டு வீடு வந்தபோது அம்மா காட்டாஸ்பத்திரிக்கு (லியோனார்டு மருத்துவமனை) போயிருப்பதாகச் சொன்னார்கள், ஹேமஸ்ரீ, பேரன்பு தமிழன், அவனது அம்மா காயத்ரி ஆகியோர் பிறந்ததும் அங்குதான்.. தம்பிப் பாப்பாவோ தங்கச்சி பாப்பாவோ பிறக்கப் போகிறதென்று புரிந்தது.  கையில் இருந்த பத்துப் பைசாவை வைத்துக்கொண்டு வரப்போகும் பாப்பாவுக்கு என்ன வாங்கித் தருவது என்று தெரியவில்லை. யூனிஃபார்மைக் கூட மாற்றாமல் அப்படியே காட்டாஸ்பத்திரிக்கு ஓடினேன். நடு இரவில் சற்றே நீலநிறத்திலிருந்த குட்டிப்பாப்பாவை அவசர அவசரமாய்க் கண்ணீல் காட்டிவிட்டு உடனே வேறொரு அறைக்குள் கொண்டுபோய்விட்டனர். பிறகு பத்து நாட்கள் கழித்து நானும் அம்மாவும் குட்டிப் பாப்பாவுடன் வீட்டுக்கு வந்தோம். அடிக்கடி மூச்சுத் திணறல் வந்து அவதியுறுவாள் ரேவதிப் பாப்பா.
*************************
அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஃபிப்ரவரி மாதத்தின் ஒரு நாள் மாலை பள்ளி விட்டு வீடு வந்தபோது ரேவதி பாப்பாவுக்கு காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. நானும் அம்மாவும் ரேவதி பாப்பாவைத் தூக்கிக்  கொண்டு அதே காட்டாஸ்பத்திரிக்குப் போனோம். ஏதேதோ கஷ்டமான இங்கிலீஷ் பெயர்களைச் சொன்னார்கள். மதுரை பெரியாஸ்பத்திரிக்குப் போகச் சொன்னார்கள். போனோம்….. இடது கையும், இடது காலும் செயலிழந்த நிலையில் அன்றிரவே அவள் இறந்து விட்டிருந்தாள்.
******************************
     அப்போது எம். எஸ்சி படித்துக் கொண்டிருந்தேன். கவிதா மைதிலி மேடம் உடல் ஊனம் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.  ஸ்பைனா பைஃபைடா (முதுகுத் தண்டு வட அழற்சி) , என்கஃபலைட்டிஸ் (மூளைக் காய்ச்சல்), செரிப்ரல் பால்ஸி (மூளை முடக்குவாதம்) என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன. அவை….நான் ஏழாம் வகுப்பு படிக்கையில் காதில் விழுந்த அதே கஷ்டமான இங்கிலீஷ் வார்த்தைகள். அந்த கஷ்டமான இங்கிலீஷ் வார்த்தைகள் காதில் விழும்போதெல்லாம்  அந்த ஏழாம் வகுப்புத் துக்கத்தில் உழல்வது தவிர்க்க முடியாதது. நேற்றிரவிலிருந்து அதே மனநிலை. 
********************************
எனினும் இந்தக் கெடு கெட்ட உலகத்தில் வாழப் பிடிக்காமல் பறந்து போன அனைத்து தேவதைகளின் பாதங்களுக்கும் அன்பு முத்தங்கள் தந்து துடைத்துக் கொள்கிறேன் அந்த ஏழாம் வகுப்பு துக்கத்தை.

Thursday, August 16, 2012

திருவிழா



இன்று எங்கள் ஊரில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரசித்தி பெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழாவின் கடைசி நாள்.     தேவராட்டம், சேவையாட்டங்களுடன் கூடவே கலர் பலூன்கள், பல நிறங்களில் சர்பத், பீம புஷ்டி ஹல்வா, ராட்டினங்கள், பொரி கடலை, வாணவெடிகள், லவுட் ஸ்பீக்கர் பாடல்கள், மொட்டைத்தலைகள், தீச்சட்டி... இன்னும், இன்னும்..........  சிறுவயதில் நான், சாந்தி, லதா, முருகேஸ்வரி, பாண்டி, ராஜ்குமார், எல்லோரும் திருவிழாவில் சுற்றி வருவோம். இரவில் பாட்டுக் கச்சேரிக்கு சாக்கு போட்டு இடம் பிடிப்பதும், பிடித்த நடிகர்கள் பாடல் வந்தால் விசிலடித்து கை தட்டுவதும் என ஒரே ரகளைதான். இந்த திருவிழாவில் லதாவையும் சாந்தியையும் தவிர எல்லாரும் அவரவர் குடும்பத்துடன் தனித்தனியே வந்திருந்தோம். நலம் விசாரித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது. சாந்திக்கு இன்றுதான் திருமணம், லதாவை இதய நோய்க் காவு கொண்டு ஐந்தாண்டுகளாகி விட்டன. இப்போது பாண்டியுடன் பேசுவதில்லை. குடும்பச் சண்டை (?). இந்தாண்டு பாட்டுககச்சேரி இல்லை. இருந்திருந்ததாலும் சாக்குப் போட்டு...., இடம் பிடித்து...., பொரி கடலை தின்று...,  கைதட்டி...., விசிலடித்து............. நடக்கிற காரியமாகப்படவில்லை.

வருடத்திற்கு வருடம் திருவிழாக் கூட்டம் அதிகனமானாலும் பரிச்சய முகங்கள் அதிகமாகவே இருந்தன. விடலைப் பருவத்தில் ரகசியமாய் ரசித்த முகங்களையும் காண நேர்ந்த தற்செயலில் விஞ்சி நின்றது சிறு பரவசம், ஆனால் காதோர நரையும், குடும்பஸ்தர்களாகி விட்ட அன்னிய உணர்வும் மெல்லிய வலியைச் சொருகின .    

ஹேமஸ்ரீக்கு பலூன் வாங்கிய மீதிச் சில்லறையில் வந்த பத்து ருபாய்த் தாள்கள் ஒன்றில் // நிலவே உன்னிடம் இந்த ரூபாய் இருக்கும் வரை நான் இருப்பேன்// என்ற கிறுக்கலான கையெழுத்து. இப்போது அந்த நிலவும் நிலவுக்குப் பணம் கொடுத்தவரும் என்ன ஆகியிருப்பார்கள் என்ற கவலை...............(தேவைதான்). இதே போன்றொதொரு வாசகத்துடன் ஆனால் திருத்தமான கையெழுத்துடன்  ஒரு புத்தம் புது ஐந்து ரூபாய் நோட்டை வெகு நாட்கள் நானும் மிகப் பத்திரமாய் வைத்த்ருந்தேன்.   இப்போது அது எந்தத் திருவிழாவிலோ....? யார் கையிலோ...?

வாழ்க்கைக் கல்வி




கடந்த மூன்று மாதங்களாகத் தரவுகளுக்காக கிராமம் கிராமமாக சென்றுகொண்டிருக்கிறோம். நேற்றும் ஒரு கிராமம். எனது பள்ளித் தோழி அஞ்சலையைச் சந்தித்தேன்.பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறிவிட்டதால் உடனேயே திருமணம். நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். முதல் பெண் பன்னிரண்டாவது படிக்கிறாளாம். ஹேமஸ்ரீ LKG(?). அஞ்சலையும் அவளது கணவரும் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். சொந்தமாக ஒரு வீடும் கொஞ்சம் நகையும் சேர்த்து வைத்திருப்பதாகவும். தனது மூத்த பெண்ணை ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்க வைக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெகு நாட்கள் கழித்த சந்திப்பு என்பதால் பள்ளி காலத்தில் செய்த சேட்டைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் (இங்கே சொல்வதற்கில்லை). இருவரது பேச்சும் தற்காலத்திற்குத் திரும்பியபோது, அஞ்சலை எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்திருந்தாள். வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனங்களை அனாயாசமாக அதே நேரம் அணித்தரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். நானும் பொறுப்பாகத் தலையாட்டிக் கொண்டே இருந்தேன். அவளது பேச்சின் விஸ்தாரமும், வீரியமும், உண்மைகளும் என்னைப் பேச்சற்றவளாக மாற்றியிருந்தன. அஞ்சலையின் வாழ்க்கை பற்றிய புரிதல்களும் சித்தாந்தங்களும் இது நாள் வரை வாழ்க்கையைப் பற்றிய எனது கற்பிதங்களை தவிடு பொடியாக்கின. அஞ்சலை மிக உயரத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.

அன்றைய மதிய உணவை அவள் வீட்டிலேயே முடித்து விட்டுக் கிளம்பி வந்து கொண்டிருந்த போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது, ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது ஸ்டடி பீரியடில் இதே அஞ்சலைக்கு நான் க்ரூப் லீடராக இருந்திருக்கிறேன். நான் சொல்லித் தரும் பாடங்களையெல்லாம் அவள் பொறுப்பாகக் கேட்டுக் கொண்டேயிருப்பாள். நேற்று நான் தலையாட்டிக் கொண்டிருந்தது போலவே......


Thursday, August 2, 2012

ரசகுல்லா மாயாண்டி


பெரியம்மாவாகியிருக்கிறேன்!!!!!!!!!!!!!

பெண்களால் நிறைந்த என் தாய் வழிச் சமூகத்தில் முதல் ஆணாக வந்து பிறந்தவரை நேற்று இரவு பத்து மணி இருபது நிமிடங்களுக்குக் கண்ணில் காட்டினார்கள்.  ஹேமஸ்ரீயின் ஆசைப்படியே கிருஷ்ணாத் தம்பி (போகோ அலைவரிசையின்  கார்ட்டூன் பாத்திரம்) பிறந்திருக்கிறார். வயிற்றுக்குள் இருக்கும் போது தன் அம்மா ஆசைப்பட்டு ரசகுல்லா சாப்பிட்ட நேரங்களில் மட்டும் அதிகமான அசைவுகளைக் காட்டியவர் என்பதால் அவருக்கு "ரசகுல்லா மாயாண்டி" என்ற செல்லப் பயரும் இருக்கிறது.


கன்னத்தைத் தடவி "குட்டித் தம்பீ..." என்று அழைத்த போது குட்டிக் கண்களால் விழித்துப் பார்த்தவர் "ஹ்ஹூ...ம்" என்று மிரட்டிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டார். நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது பிறந்த என் தங்கை காயத்ரியை முதன் முதலில் கையில் வாங்கியவள் நான்தான். இப்போது அவள் குழந்தையையும்.... அவ்வகையில் அவர் என் குழந்தையின் குழந்தை.  அவரைக் "கொண்டாடவும்", "குறிப்பறிந்து பணி செய்யவும்" தயாராகிக் கொண்டிருக்கிறேன்.


இன்னும் நான்கு வாரங்கள் முழுதாய் இருக்க அவசரக் குடுக்கையாக வந்துவிட்டவரை இப்போது கண்ணாடிப் பெட்டி அடைகாத்துக் கொண்டிருக்கிறது. தம்பியுடன் நேரத்தைக் கழிக்க ஹேமஸ்ரீ இப்போதிருந்தே திட்டமிடத் துவங்கிவிட்டாள். இருந்தாலும் waiting for the super hit episodes of Sibling Rivalry.


Thursday, July 19, 2012

ஒரு குரூப்பாய் இருக்கும் சொந்தங்கள்


       
 சொந்த ஊரில் சொந்தபந்தங்களுக்கு நடுவில் வாழப் பழகியிராத பதினோராவது வயது வரை ஜாதி, மதம் பற்றிய எந்த ப்ரக்ஞையும் இருந்ததில்லை. பெற்றோரின் நட்புவட்டங்களையும், அக்கம்பக்கத்து வீட்டாரையும் அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அண்ணன், அக்கா என்று உறவுமுறை சொல்லி அழைத்துக் கொண்டிருந்ததும் அவர்கள் எல்லோருமே நமக்கு உறவினர் என்று நினைத்துக்கொண்டிருந்ததுமான காலம் அது. 

   முதன் முதலில் “அவங்க வேற நம்ம வேற என்ற விழிப்பு (?) வந்தது பள்ளியில் கல்வி உதவித்தொகைக்கு பட்டியலெடுக்க ஆள் வந்தபோதுதான். "வேற வேற ஜாதிக்காரவங்க சொந்தக்காரவங்களா இருக்க முடியாது" என்று அறிவுறுத்தப்பட்டதும் அந்த காலகட்டத்தில் தான். அப்போது ஏற்பட்ட உணர்வுக் குழப்பத்தில் யரைப் பார்த்தாலும் இவங்க நம்ம சொந்தக்காரவங்களா இல்லையா? எனக் கேட்க ஆரம்பித்திருந்தேன். ஆனாலும் அதே உறவுமுறைகள்தான் இன்றுவரைத் தொடர்ந்து கொண்டும் மிகத் தொலைவில் இருக்கும் உறவினர்களின் வெற்றிடத்தை எப்போதும் நிரப்பிக் கொண்டுமிருக்கின்றன. 
     
   இன்று தெருவுக்குத் தெரு பேனர்களிலும், போஸ்டர்களிலும் முகம் காட்டிக்கொண்டிருக்கும் ஜாதிவாரி 'சொந்தங்களிலும்', 'பாய்ஸ்களிலும்', 'க்ரூப்புகளிலும்' நாம் உறவுமுறை கொண்டாடியவர்களின் பிள்ளைகள் முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகவும் நிறையப் பயமாகவும் இருக்கிறது. "நாங்க இன்ன குரூப்!!!!!!!"-பென்று ஒரு அடையாளத்தைச் சுமந்துகொண்டிருப்பவர்களிடம் முன்னெப்போதும் போல எதையும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இறுக்கமான புன்னகையைத் தவிர.